ஞாயிறு, 22 ஜூலை, 2012

கடவுள் துகள் என்றால் என்ன தவறு?





அண்மையில் செர்ன் விஞ்ஞானிகள் கண்டறிந்த அணுவின் உப அணுவை, அதன் நுண்துகளை கடவுள் துகள் (God Particle) என்று பல விஞ்ஞானிகள் உட்பட பெரும்பாலானோர் வர்ணிக்கிறார்கள். ஆனால் சிலர் அதனை கடவுள் துகள் என்பது சரியல்ல. விஞ்ஞானிகளை பல காலம் அலைக்கழித்ததால் நாசமாய்போன துகள் (Goddamn Particle) என்பதுதான் சரி, அதுதான் அதற்கு முதன்முதலில் சூட்டப்பட்ட நாமகரணம் என்று வாதிடுகிறார்கள்.

பிரபஞ்சத்தின் தொடக்கத்துக்கு மட்டுமின்றி, இதில் தோன்றிய பொருட்கள் மற்றும் உயிரினங்களின் தோற்றத்திற்கும் ஆதாரமாக விளங்கும் அந்த அதிசய நுண்துகளை, நாசமாய்போன துகள் என்று வசவு மொழியில் கூறுவதைவிட, கடவுள் துகள் என வாழ்த்து மொழியில் கூறுவதே சாலச் சிறந்தது. இது, உணர்வுப்பூர்வமாகக் கூறப்படவில்லை, அறிவுப்பூர்வமாகவே இது சரியானதுதான் என்பதை எடுத்துரைக்கவே இந்தக் கட்டுரை.






கடவுள் என்பதன் பொருள் யாது? இதுவரை மனித வர்க்கம் அறிந்து கொள்ள முயன்றும் அறியப்படாமல் இருப்பதுதானே? இருப்பினும் ஆன்மிக உச்சத்தில்- பிரபஞ்சத்தின் இயக்கத்தில் உள்ள ஓர் ஒழுங்குமுறை, ஒருங்கிணைப்பு, ஆதார விசை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்புக் கோட்பாடு தானே கடவுள் என்பது?
இதனைத்தான் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகளும் தாங்கள் கொண்டிருக்கும் கடவுள் கொள்கை என்பதற்கான விளக்கம் என விளம்பியிருக்கிறார்கள். ஐன்ஸ்டீன், தனிப்பட்ட- கையும் காலும் உள்ள மனிதனைப் போன்ற ஒரு கடவுள் என்று கூறப்படுவதைத்தான் மறுதலிக்கிறார். கருத்தியலிலான அண்டவெளிக் கடவுள் அதாவது காஸ்மிக் காட் (Cosmic God) என்பதனை ஏற்கவே செய்கிறார்.

அந்தவகையில் அண்மையில் செர்ன் விஞ்ஞானிகள் ஆய்வில் உறுதி செய்யப்பட ஹிக்ஸ் போஸன் அணுத்துகளை, கடவுள் துகள் என்று கூறுவதில் என்ன தவறு? அணுவின் பிளப்பில் கண்டறியப்பட்ட பதினாறு துகள்கள் மட்டுமே பிரபஞ்சத்தின் தொடக்கத்திற்கு காரணமாக அமையாமல் அவற்றின் ஊடோடி, அதே நேரத்தில் அவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு துகளும் பிரபஞ்சத்தின் தொடக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற அறிவியலாளர்களின் சந்தேகம் தானே, சுவீடன் – பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கு அமைந்த அவசியம். அந்த ஆய்வில் தானே, ஹிக்ஸ் போஸன் என்ற நிறை மிகு துகளின் இருப்பும், அதன் இருப்பினால் மட்டுமே இந்தப் பிரபஞ்சமும், உயிரினங்களும் கட்டமைக்கப் பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டது?



ஆக, ஜட வஸ்துவுக்கு ஓர் உயிர்ப்பாய், இயக்கமாய், அறிவாய், நிறைவாய் அந்த நிறை மிகு (அதாவது ஆங்கிலத்தில் மாஸ் எனப்படும் நிறைக்குக் காரணமான) ஹிக்ஸ் போஸன் துகள் அமைந்திருக்கிறது. ஏறத்தாழ கடவுளுக்குப் பொருந்தும் அதே தன்மை பொருந்தியுள்ள இதனை கடவுள் துகள் என்று உரைப்பதில் என்ன தவறு?

இந்திய ஆன்மிகம், விஞ்ஞானத்துக்கு இணக்கமாகத்தான் இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது, எடுத்துச் செல்கிறது. பாமரத்தனமான, சமயம் சார்ந்த தனிப்பட்ட கடவுள் என்பதாக அல்லாமல் ஒரு கருத்துரு கடவுளாகத்தான் இந்திய ஆன்மிகக் கோட்பாடுகள் கடவுளை காட்சிப் படுத்துகின்றன. அதற்கு பக்க பலமாகவே தற்போதைய ஹிக்ஸ் போஸன் கண்டுபிடிப்பும் அமைந்திருக்கிறது என உறுதிபடக் கூறலாம்.





ஏனெனில் பெரு வெடிப்புக் கொள்கை மற்றும் அதன்வழி பிரபஞ்சம் உருவான கோட்பாடு ஆகியவற்றை இந்திய ஆன்மிகமும் இலக்கியங்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தியம்பி இருக்கின்றன. “விசும்பின் ஊழி ஊழ் ஊழ் செல்ல கருவளர் வானத்து இசையின் தோன்றி” என்று தொடங்கும் பரிபாடல், பெரு வெடிப்பையும் அதன் பின் வான், காற்று, தீ, நீர், நிலம் என அடுத்தடுத்து பஞ்சபூதங்களாய் உலகம் விரிந்ததையும் அழகாய் சித்திரிப்பதை இதற்கோர் எடுத்துக்காட்டாய் கூறலாம்.

மேலும், அணுக்களின் சேர்க்கையும் அவற்றின் இயக்கமுமே இந்தப் பிரபஞ்சம் என்பதை இந்திய ஆன்மிகத்தின் வைசேஷிக தத்துவம் ஏற்கெனவே எடுத்துரைத்துள்ளது. அந்தத் தத்துவத்தில், குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் தோன்றி மறைகின்ற இந்தப் பிரபஞ்சத்தின் (மறு)தோற்றத்துக்கும் இதன் செயல்பாட்டுக்கும் அணுக்களே காரணம் என்று கூறுகிறது. அதனைவிட முக்கியமாக, அத்ருஷ்டம் என்ற காணவியலாத, வகைப்படுத்த முடியாத ஒரு சக்திதான் அணுக்களை இயங்கச் செய்கிறது எனவும் வைசேஷிகம் உரைக்கிறது. தற்போது கண்டுணரப்பட்ட ஹிக்ஸ் போஸன்வைசேஷிகம் கூறிய அத்ருஷ்டத்தை மெய்ப்பிப்பதுபோல்தானே இருக்கின்றது?



தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது இந்திய ஆன்மிகக் கருத்து. அதனை விஞ்ஞான ரீதியில் இந்தியர் ஜெகதீச சந்திர போஸ் நிரூபித்தார். அதேபோல, சத்யேந்திர நாத் போஸ் என்ற இந்திய அறிவியலாளர் முதன்முதலாய் கூறியதால் போசோன் என்று பெயர் பெற்ற மர்மத் துகளும், அத்ருஷ்டமாய் விளங்கும் கடவுள் துகளாக இருக்கலாம் அல்லவா?

_ பத்மன் (நா. அனந்த பத்மநாபன்)
Email: napnaban1967@gmail.com               

4 கருத்துகள்:

  1. அறிவியலையும் , ஆன்மீகத்தையும் சம விகிதத்தில் ஆராய்ந்திருக்கிறீர்கள் , உங்கள் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  2. கடவுள் என்பதனை இந்தத் துகளுக்குள் அடக்க இயலாது. அதன் ஒரு கூறு எனக் கூறலாம்

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி திரு. அருள். விளங்க முடியாத, விளக்க முடியாத, விலக்க முடியாத கடவுள் தன்மை விஞ்ஞானத்திலும் விளையாடுகிறது.

      நீக்கு