வெள்ளி, 31 ஜனவரி, 2014

சொக்கநாதரின் சுவையான லீலைகள்




திருவிளையாடல் என்றதுமே, திரைப்படத்தின் தாக்கம் காரணமாக அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது, புலவர் தருமிக்காக சிவபெருமான்,   நக்கீரனுடன்,  என் பாட்டில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?”  என்று நீட்டி முழக்கும் வசனம்தான். இதில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமேஎன்று  உரைக்கும் நக்கீரனைப் பார்க்கும்போது,  ஆகா! கடவுளே வந்தாலும் அவரிடம் உள்ள குற்றத்தை தைரியமாகச் சொல்லும் தமிழ்ப் புலவன் இவன் அல்லவா?  என்று எண்ணத் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல.

தலைசிறந்த தமிழ்ச் சங்கப் புலவனாகவும், பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து கிடந்தபோது,  கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி,  பெருந்தேவ பாணி,  திருவெழு கூற்றிருக்கை ஆகிய பாமாலைகளைப் புனைந்தவனாகவும் நக்கீரன் திகழ்ந்தபோதிலும், அப்புலவனின் தமிழில் முறையாக இலக்கணம் அறியாத சொற் குற்றம் இருப்பதை இறைவன் கண்ணுற்றார். தன்னிடமே பிழை கண்டவனாயிற்றே என்று நக்கீரனைத் தள்ளி வைக்காமல், அவரது தமிழில் இருந்த குறைகளை, நல்லதோர் ஆசானை அனுப்பி களையச் செய்து, செப்பனிட்டுத் தந்தவர் சிவபெருமான். இது, இறைவனின் 54-வது திருவிளையாடலாக, ‘கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் என்ற தலைப்பில் திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்றுள்ளது.

                இலக்கணம் இவனுக் கின்னுந் தெளிகில இதனா லாய்ந்த
                நலத்தசொல் வழூஉச்சொ லென்ப தறிகிலன் அவைதீர் கேள்விப்
                புலத்தவர் யாரைக் கொண்டு போதித்தும் இவனுக் கென்னா
                மலைத்தனு வளைத்த முக்கண் மன்னவன் உன்னு மெல்லை.       (2572)

இவனுக்கு (நக்கீரனுக்கு) இன்னும் இலக்கணம் நன்கு விளங்கவில்லை. அதன் காரணத்தால், நன்மையுடய சொல் இது, குற்றமுடைய சொல் இது என்று பிரித்தறியத் தெரியவில்லை. எனவே, குற்றமற்ற கேள்விப் புலமை வாய்ந்த யாரைக் கொண்டு நக்கீரனுக்கு இலக்கணம் போதிக்கலாம்?”  என்று மலையை வில்லாக வளைத்த முக்கண்ணனார் சிந்தித்தார் என்பது மேற்கண்ட செய்யுளின் பொருள்.



இவ்வாறு, சிவபெருமான் சிந்திக்கும் நேரத்தில், ‘முன்னர் ஒருமுறை பூமி பாரத்தைச் சமமாக்கும் பொருட்டு, அகத்திய முனிவனைத் தென்திசைக்கு தாங்கள் அனுப்பியபோது, அந்த முனிவருக்கு செந்தமிழின் முதல் நூலாம் இலக்கண நூலை தாங்களே கற்பித்தீர்களே? அப்படிப்பட்ட அகத்தியனைக் கொண்டு நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் கற்பிக்கலாமே! என்று உமையம்மை எடுத்துக்கூறுகிறாள். அவ்விதமே அகத்தியனை மதுரைக்கு அனுப்பி நக்கீரனுக்கு நற்றமிழ் இலக்கணத்தை நவிலச் செய்தார் சிவபெருமான்.

அவ்வகையில், குறுமுனிவர் அகத்தியர், நக்கீரனின் குற்றத்தைக் களையும் வகையில், பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம், உடன்படல் முதலிய ஏழுவகை மதங்கள் (நூல் கருத்துகள்); அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பயன்கள்; குன்றக்கூறல் முதலிய பத்துவகைக் குற்றங்கள்; சுருங்கச் சொல்லல் முதலிய பத்து அழகுகள்; நுதலிப் புகுதல் முதலிய 32 உத்திகள் ஆகியவற்றையும் முதல் நூலின் தொகை, வகை, விரி என்னும் முறைகளால் எடுத்துக் கூறியதுடன், கருத்துரை, பதவுரை அடங்கிய காண்டிகை உரை, விருத்தியுரை ஆகியவற்றையும் முதல் நூலின் உட்பொருளையும் ஐயங்கள் நீங்குமாறு எடுத்துரைக்கிறார். அவ்வாறு அகத்தியர் கற்பித்த திறத்தைக் கண்டு வியந்து, அந்நூலின் பொருளாகவே முதல் ஆசிரியாராகிய சிவபெருமான் வீற்றிருந்தார்.   
      
                இருவ கைப்புற வுரைதழீஇ யெழுமத மொடுநூற்
                பொருளொடும் புணர்ந் தையிரு குற்றமும் போக்கி
                ஒருவி லையிரண் டழகொடும் உத்தியெண் ணான்கும்
                மருவு மாதிநூ லினைத்தொகை வகைவிரி முறையால்.        (2586)
               
                கருத்துக் கண்ணழிவு ஆதிய காண்டிகை யானும்
                விருத்தி யானும்நூற் கிடைப்பொருள் துளக்கற விளக்கித்
                தெரிந்து ரைத்தனன் உரைத்திடு திறங்கண்டு நூலின்
                அருத்த மேவடி வாகிய ஆதியா சிரியன்.                 (2587)

என்று இதனை திருவிளையாடல் புராணம் விவரிக்கிறது.
புலவர்கள், அதுவும் தமிழ்ப் புலவர்கள் என்றால் சண்டையும் சச்சரவும் சகஜமான விஷயமாயிற்றே! அதுபோல் ஒருமுறை சங்கப் புலவர்கள் இடையே யாருக்குப் புலமை அதிகம்? என்று சண்டை மூண்டபோது, அதனைக் களைந்து, சிறந்த புலவர்கள் யார்? என்பதை நிலைநாட்டி, அவர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்திய திருவிளையாடலும் சுவையானதே.

 
சங்கப் புலவர்களிடையே சச்சரவு எழுந்தபோது, ஒரு புலவர் வடிவில் தோன்றிய சிவபெருமான், 'தனபதி-குணசாலினி  என்ற தம்பதியருக்கு முருகப் பெருமானே மகனாகப் பிறந்துள்ளான். ஊமையான அவனிடம் சென்று புலவர்கள் தங்கள் பாடல்களைக் கூறினால், சிறந்தவற்றை அவனே தேர்ந்தெடுத்துத் தருவான்' என்று கூறுகிறார். ஊமை எப்படி தீர்ப்பு வழங்குவான்? என்று புலவர்கள் கேட்க, ஊமையானாலும் கேள்வித் திறன் மிகுந்த அவன், முகக் குறியாலேயே யாருடைய பாடல் சிறந்தது என்பதைக் காட்டிடுவான் என்கிறார் இறைவன்.

அதன்படி, ஊமைப்பிள்ளையிடம் சென்று அனைத்துப் புலவர்களும் தங்கள் செய்யுட்களைக் கூறுகின்றனர். சிலரது பாடலில் உள்ள சொல்லாழத்தையும், வேறு சிலரது பாடல்களில் உள்ள பொருட்செறிவுகளையும், மற்றும் சிலரது சொல் மற்றும் பொருள் அழகையும் கேட்டு, தோள்களைக் குலுக்கி, கண்களில் நீர்வடிய அந்த இளைஞன் மகிழ்கிறான். பலரது பாடல்களைக் கேட்டதும் தலையைச் சாய்த்து இகழ்கிறான். இவ்வாறாக, நக்கீரர், கபிலர், பரணர் ஆகிய மூவரது பாடல்களை மட்டுமே மிகச் சிறந்தது என அந்த இளைஞன் ஏற்கிறான். இதனை உணர்ந்ததும், புலவர்கள் கலகம் தீர்ந்து, மீண்டும் நட்பு பூண்டனர் என சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்   விளக்குகிறது.

இவற்றையெல்லாம்விட ஒரு தமிழ்ப் புலவனுக்காக பாண்டிய மன்னனிடம் கோபித்துக் கொண்டு, சிவபெருமான் மதுரையம்பதியை விட்டு அருகே உள்ள வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்த சுவையான திருவிளையாடலை, ‘இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் எடுத்துரைக்கிறது. மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னருள் குலேச பாண்டியன் என்பவன், சிறந்த தமிழ்ப் புலவன். ஆதலால், தமிழ்ச் சங்கத்தில் அவனும் ஒரு புலவனாக வீற்றிருக்கும் சிறப்பு படைத்திருந்தான்.


ஒருமுறை, புலவர் கபிலரின் நண்பரான இடைக்காடன் என்ற புலவர், சிறப்பான பனுவல் ஒன்றை இயற்றிக் கொண்டு, மன்னன் குலேச பாண்டியனைக் காணச் சென்றான். இடைக்காடன் பாடிய பாடல்கள் சொற்சுவை, பொருட்சுவை மிகுந்திருந்த போதிலும், குலேச பாண்டியன் பொறாமை காரணமாக, மனத்தில் தோன்றிய மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமலும், யாதொரு சொல்லும் கூறாமலும் பேசாமலிருந்தான். இந்த அவமானத்தைப் பொறுக்க முடியாத இடைக்காட்டுப் புலவன்,  நேராக மீனாட்சி-சோமசுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று, இறைவனிடம் முறையிட்டான்.

தமிழறிந்த பெருமானே! திருவாலவாய் இறைவனே! தன்னைச் சரணடைந்தவர்களுக்கு நல்ல நிதி போன்ற கடவுளே! சிறந்த (வேப்பம்பூ) மாலையை அணிந்த பாண்டிய மன்னன் பொருட்செல்வத்தில் மட்டுமல்ல, கல்விச் செல்வத்திலும் மிகச் சிறந்தவன் என கற்றோர் கூறக் கேட்டு, சொற்சுவை மிகுந்த பாடலை அவன் முன்னே பாடி நின்றால், சிறிதுகூடத் தலையை அசைக்காமல் என்னை அவமதித்துவிட்டான்என்று புலம்பினான் புலவன்.     

சந்நிதியில் வீழ்ந்தெழுந்து தமிழிறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்
                நன்னிதியே திருவால வாயுடைய நாயகனே நகுதார் வேம்பன்
                பொன்னிதிபோல் அளவிறந்த கல்வியுமிக் குளனென்று புகலக் கேட்டுச்
                சொன்னிறையுங் கவிதொடுத்தே னவமதித்தான் சிறிதுமுடி துளக்கா னாகி.
                                                                                                                                                                                (2618)

அதுமட்டுமின்றி, ‘என்னை ஓர் அஃறிணைப் பொருள்போல் பார்த்து அரசன் வாளாவிருந்துவிட்டானே!என்று அரற்றிய இடைக்காட்டுப் புலவன், ‘இது எனக்கு ஏற்பட்ட அவமானமா? இல்லையில்லை. சொல்லின் வடிவமாக உன் இடப்புறத்தே என்றும் விளங்கும் உமையம்மையையும், சொல்லின் பொருளாகத் திகழும் உன்னையும்தான் அப்பாண்டியன் அவமானப்படுத்திவிட்டான் என்று சொல்லி சினத்துடன் மதுரையின் வடபுறத்தே சென்றான். உடனே, சிவபெருமான், தனது லிங்கத் திருமேனியை மறைத்து, உமாதேவியாகிய மீனாட்சியுடன், திருக்கோவிலுக்கு வடக்கே, வைகை நதிக்குத் தெற்குப் புறத்தே ஒரு கோவிலை உண்டுபண்ணி அங்கே வீற்றிருந்தார். தெய்வத்தன்மை பொருந்திய சிறந்த தமிழ்ப் புலவர்களும் சிவபெருமானைப் பின்தொடர்ந்து அந்தக் கோவிலைச் சென்றடைந்தனர்.

மறுநாள் அதிகாலை, திருக்கோவில் சென்ற சிவனடியார்கள், சிவலிங்கத்தைக் காணாது அச்சமும் வியப்பும் மேலிட மன்னனிடம் விரைந்து சென்று முறையிட்டனர்.  இதைக் கேட்டதும் பாண்டியன் மூர்ச்சிந்து விழுந்தான். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து, இறைவா! நான் என்ன குற்றம் செய்தேன்? என்று அழுது புலம்பினான். அப்போது சிலர் பாண்டியனிடம் ஓடிவந்து, புதிய கோவிலிலே சிவபெருமான், உமையம்மையோடும், தமிழ்ப் புலவர்களோடும் வீற்றிருக்கும் அதிசயத்தைக் கூறினர். உடனடியாக அங்கு விரைந்தோடிய பாண்டிய மன்னன் சொக்கநாதர் திருமேனி முன்பு பல துதிகளை மனமுருகிப் பாடி நின்றான்.

அப்போது அசரீரியாக, ‘உனது துதியால் எனக்கு மகிழ்ச்சி. இங்கு யாம் உறைகின்ற லிங்கம், குபேரனால் பூசிக்கப்பட்ட சுயம்பு லிங்கம். ஊழிக்காலத்தும் மறையாத பெருமை வாய்ந்தது. இன்று முதல் இந்தத் திருத்தலம் வடதிருவாலவாய் என்று புகழ் பெறும். இடைக்காடன் செய்யுளை நீ அவமதித்ததன் காரணமாக, அவன் மேல் எழுந்த அன்பினால் யாம் இங்கு வந்தோம் என்று சிவபெருமான் கூறுகிறார். உடனே, தன் பிழைக்கு வருந்தி, பாண்டிய மன்னன் மன்னிப்புக் கோருகிறான். சிவபெருமானும் உமையம்மை மற்றும் சங்கப் புலவர்கள் புடைசூழ மீண்டும் திருக்கோவிலில் எழுந்தருளினார். பாண்டிய மன்னனும் இடைக்காட்டுப் புலவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று, உரிய சிறப்புகளை அளித்து கௌரவித்தான்.

 
இவ்வாறாக சொக்கநாதர், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலே தாமே ஒரு புலவராக வீற்றிருந்தது மட்டுமின்றி, சங்கப் புலவர்கள் இடையே ஏற்பட்ட பிணக்குகளையும் தீர்த்து வைத்து, புலவர்களுக்கு உரிய சிறப்புகளையும் வாதாடி பெற்றுத் தந்து, தமிழே உருவாய் வீற்றிருக்கிறார். சொக்கம் என்றால் மாசு மருவற்ற அழகு என்று பொருள். எனவேதான், சிறிதும் கலப்பற்ற 24 காரட் தங்கத்தை சொக்கத் தங்கம் என்கிறார்கள். சங்கத் தமிழ் என்றால் மாசு மருவற்ற சொக்கத் தமிழ் அல்லவா? அதனால்தான் சொக்கநாதரும் பெயருக்கேற்ப தானும் களங்கமற்ற அழகோடு திகழ்வதுடன், தன்னால் இலக்கணம் வகுக்கப்பட்ட தண்டமிழும் குறையின்றி நிறையோடு விளங்க மதுரையம்பதியிலே பல சுவையான திருவிளையாடல்களைப்  புரிந்திருக்கிறார். எந்நாட்டவர்க்கும் இறைவனான கயிலையம்பதி, தென்னாடுடடைய சிவனாகச் சிறப்பித்துக் கூறப்படுவதன் உட்பொருளும் இதுவேதான். ஓம் நமசிவாய!

-          பத்மன்

4 கருத்துகள்:

  1. விளக்கம் மிகவும் சிறப்பு ஐயா... நன்றிகள் பல...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அருமைஜி...
    தமிழ் பெருமை மட்டுமல்ல; தருமிக்கு வாழ்வு தந்த சொக்கனின் பெருமையும், முழுமையாக தெரிந்து கொண்டோம்.
    தொடரட்டும் உங்கள் தண்டமிழ் பணி...

    பதிலளிநீக்கு
  3. கருத்துடன் கருத்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு